நாலு கோடி சம்பள பாக்கியைத் தரக்கோரி தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர் K.E ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் எம்.ராஜேஷின் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்திற்காக சிவாவுக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.15 கோடி என்றும், ஆனால் அவருக்கு ரூ.11 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மீதி சம்பள பாக்கியையும் அதற்காக டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் சிவாவின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவிர, அந்த சம்பள பாக்கியைக் கொடுக்கும்வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் அவரது படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து கோடம்பாக்க வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள்
''சிவகார்த்திகேயனின் ஆரம்பகால படங்களின்போது அதாவது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' முடியுற சமயத்தில் அப்போது அவரது சம்பளம் ஒரு கோடி அளவில் இருந்தது. அப்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சிவாவுக்கு ரூ. 25 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து கமிட் செய்தார். மீதியைப் படம் பண்ணும்போது பேசிக்கொள்ளலாம் என்றிருக்கிறார். ஆனால், அதன்பிறகு சில வருடங்களில் சிவாவின் மார்க்கெட் மளமளவென எகிறியதில் சம்பளமும் ரூ.20 கோடியை எட்டியது. அந்த சமயத்தில் ஞானவேல்ராஜா சிவாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். முன்பு பேசியபடி ஒரு கோடிதான் சம்பளம் தருவேன். அதிலும் வாங்கின அட்வான்ஸ் போக, மீதி 75 லட்சம்தான் பாக்கி தர வேண்டியது என அப்போது ஒரு பஞ்சாயத்து கிளம்பியது. ஆனால், முன்னணி தயாரிப்பாளரான உங்களுக்கு என் மார்க்கெட் தெரியும். எனவே ரூ.15 கோடியாவது சம்பளமாக வேண்டும் என்றிருக்கிறார். தயாரிப்பாளர் சங்கம் உள்பட பலகட்ட பஞ்சாயத்துக்குப் பிறகு ராதாரவி முன் ரூ.11 கோடி அக்ரிமென்ட்டும் மீதியை பின்பு தருவதாகச் சொல்லி சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்தனர். அதன்பிறகு தான் 'மிஸ்டர் லோக்கல்' டேக் ஆஃப் ஆனது. எனவே, இன்னும் கைக்கு வராத பாக்கி சம்பளத்தை கேட்டு சிவா கிளம்பியிருக்கிறார்'' என்கிறது சிவாவின் தரப்பு.
ஆனால் ஞானவேல்ராஜாவின் தரப்போ, ''மிஸ்டர் லோக்கல்' இயக்க நாங்க வேறொரு இயக்குநரை தான் சிவாவிடம் சொன்னோம். ஆனால் அவர்தான் ராஜேஷ் வேண்டும் என்றிருக்கிறார். சிவா சொன்னதால் தான் நயன்தாராவையே கமிட் செய்தோம். படமும் சரியா போகலை...'' என்கிறது அவர் தரப்பு. இண்டஸ்ட்ரியில் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமை இல்லை. தயாரிப்பாளர் சங்கமே, நாலைந்து சங்கம் இருப்பதால் அங்கே நியாயம் கிடைக்காது என்பதால்தான் சிவா நீதிமன்றம் நாடியிருக்கிறார் என்றும் சம்பள பாக்கி நாலு கோடிக்கான ஆதாரம் சிவாவிடம் இருப்பதால் தான் துணிந்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
from தமிழ் சினிமா https://ift.tt/beiCs69
https://ift.tt/8wEe1Kk
Comments
Post a Comment