"நீங்க உங்க திறமையால உயர்ந்தீங்க!"- ஷங்கரை ஆசீர்வதித்த கே.டி.குஞ்சுமோன்; சந்திப்பின் பின்னணி என்ன? https://ift.tt/hiAH1bV
இயக்குநர் ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்புக்கான முதல் அழைப்பிதழைத் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் வழங்கி, ஆசி பெற்றிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்று இரு மகள்களும் ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா - ரோஹித் தாமோதரன் திருமணம் கடந்த 27-06-2021 அன்று, ஞாயிற்றுக்கிழமை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. அப்போது கொரோனா சூழலால் மிக நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். அந்தத் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
கொரோனா பரவல் குறைந்த பிறகு, அதாவது சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் தன் நட்பு வட்டம் மற்றும் திரையுலகினரை அழைத்துச் சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார் இயக்குநர் ஷங்கர். இப்போது வரவேற்புக்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டது. முதல் பத்திரிகையை தன் முதல் படத் தயாரிப்பாளரான 'ஜென்டில்மேன்' கே.டி.குஞ்சுமோனுக்கு வழங்கி ஆசி பெற்றார் ஷங்கர்.
கே.டி.குஞ்சுமோனிடம் ஷங்கர் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிய புகைப்படம் வெளியான அடுத்த நிமிடமே இது ஷங்கரின் இளைய மகளும் 'விருமன்' கதாநாயகியுமான அதிதி ஷங்கரின் திருமண அழைப்பிதழாக இருக்கும் எனச் சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்தது. ஆனால் அதில் உண்மையில்லை.
ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண வரவேற்பு வருகிற மே 1-ம் தேதி திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா மண்டபத்தில் நடக்கிறது. தயாரிப்பாளர் அன்புச்செழியனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ந்த இடம் இது.
இயக்குநர் ஷங்கரை சந்தித்த கே.டி.குஞ்சுமோன், மனம் மகிழ்ந்து... "நீங்க உங்க திறமையாலதான் மேன்மேலும் உயர்ந்திருக்கீங்க. இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துகள்" என ஆசீர்வதித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தற்போது வேறொரு இயக்குநரை வைத்து 'ஜென்டில்மேன் 2' படத்தைத் தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
from தமிழ் சினிமா https://ift.tt/JY5XVq7
https://ift.tt/DC8hAwQ
Comments
Post a Comment