இளையராஜாவின் பசி! https://ift.tt/Icu6vxq

சியில்தான் எத்தனை வகை! இளையராஜாவிற்குக் குரல் பசி. அவர் அறிமுகப்படுத்திய, பிரபலமாக்கிய குரல்கள்தான் எத்தனை எத்தனை! இதோ அவர்களைப் பற்றி இளையராஜாவே கூறுகிறார்..

மலேசியா வாசுதேவன்: இவர் பாடிய சில விளம்பரப் பாடல்களுக்கு நான் கிடார் வாசித்திருக்கிறேன். பல மியூஸிக் டைரக்டர்களிடம் இவர் பாடியிருந்தாலும், என் குழுவில் சேர்ந்த பிறகுதான் பிரபலமானார் என்று நிச்சயமாகச் சொல்லலாம். 'பதினாறு வயதினிலே' படத்தில் கமல்ஹாசனே பாட இருந்த ஒரு பாட்டை, நாங்கள் வாசுதேவனை வரவழைத்துப் பாட வைத்தோம். உண்மையிலேயே 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டது.' - அதுவும் பொன் முட்டைகளாக இட்டு வருகிறது.

Ilaiyaraja introduced to Tamil singers

பேபி அனிதா: ஒரு கச்சேரியில் இவளது குரலைக் கேட்டேன். 'உறவாடும் நெஞ்சம்' படத்திற்கு 'Dear Uncle' என்ற பாடலைப் பாட ஒரு குழந்தையின் குரல் தேவைப்பட்டது. அதில், தன் மழலையைக் கொட்டினாள் பேபி அனிதா.

பூரணி: இவரும் எனக்கு ரேடியோ விளம்பரப் பாடல்கள் பாடும்போதே அறிமுகமானவர். 'அவர் எனக்கே சொந்தம்' என்ற படத்தில், 'தேவன் திருச்சபை மலர்களே...' என்ற பாட்டைப் பாடினார்.

சுஜாதா: ஜேசுதாஸின் இசைக்குழுவில் சிறுமியாக இருந்தபோதே அறிமுகப்படுத்தப்பட்டவர். ஒரு கச்சேரியில் இவரது பாட்டைக் கேட்டேன். இந்தச் சிறுவயதில் இத்தனைத் திறமையா என்று வியந்தேன். 'கவிக்குயில்' படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான 'காதல் ஓவியம்' பாட்டைப் பாட வைத்தேன்.

சசிரேகா: புல்லாங்குழல் வாசிக்கும் 'குணசிங்' என்பவர் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனார். 'காயத்ரி'யில் 'வாழ்வே மாயமா?' என்ற பாட்டையும், 'லட்சுமி'யில் 'மேளம் கொட்ட நேரம் வரும்' என்ற பாட்டையும் பாடினார்.

கோவை முரளி: எனது மேடை இசைக் குழுவில் பாடுபவர். சட்டம் என் கையில், இது எப்படி இருக்கு போன்ற படங்களில் காமெடி பாடியிருக்கிறார்.

நீரஜா: ரேடியோவில் எம்.பி.சீனிவா சன் இசைக்குழுவில் எனக்கு அறி முகம் ஆனவர். 'சிட்டுக்குருவி'யில் இவர் பாடிய, 'அடடா மாமரக் கிளியே' பெரிய ஹிட்!

ஜென்ஸி: ஜேசுதாஸ் என்னிடம் இவரை அறிமுகம் செய்து வைத்தார்.இவர் குரல் புது மாதிரியாக இருந்தது. 'திரிபுரசுந்தரி' படத்தில், 'வானத்துப் பைங்கிளி' என்ற பாட்டைப் பாட வைத்தேன். 'அடி பெண்ணே...' (முள்ளும் மலரும்) 'என்னுயிர் நீதானே' (ப்ரியா) 'தம் தனனம் தனனம்' (புதிய வார்ப்புகள்) போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியவர் இவர்தான். தமிழ்ப் பாட்டை மலையாளத்தில் எழுதி வைத்துக்கொண்டு பாடுகிறார். எந்த ஸ்தாயியிலும் அநாயாசமாகப் பாடுவார். ஒரு சிறு குறை... தமிழ் உச்சரிப்பை நன்றாகக் கற்றுக்கொண்டு பாடினால், இவர் தென்னகம் அளித்த பிரபல பாடகியாவார்!

கல்யாணி மேனன்: தயாரிப்பாளர் பாலாஜி இவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்து, 'பாடச் சொல்லிக் கேட்டுப் பாரு' என்றார். கேட்டதில், சில டைப் பாடல்களைப் பாட வைக்கலாம் என்று நினைத்தேன். 'நல்ல தொரு குடும்பம்' படத்தில் 'செவ் வானமே... பொன்மேகமே' என்ற பாட்டைப் பாட வைத்தேன்.

Ilaiyaraja introduced to Tamil singers

ஷைலஜா: 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' தெலுங்குப் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுடன் நாலு வரிகள் பாட, என் உதவியாளர் இவரை அழைத்து வந்தார். இவர் எஸ்.பி.பாலுவின் தங்கை. 'என் தங்கை என்பதால் சான்ஸ் கொடுன்னு நான் கேட்கமாட்டேன். அவள் பாட்டு உனக்குப் பிடித்திருந்தால் பாடச் சொல்' என்றார் பாலு. ஷைலஜாவின் குரலும் பாடும் விதமும் புதுமையாக இருந்தது. 'பொண்ணு ஊருக்குப் புதுசு' என்ற படத்தில், 'சோலைக் குயிலே' பாட்டைப் பாட வைத்தேன். முதல் பாட்டே ஹிட் ஆனது. 'கல்யாணராமன்' படத்தில் 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே' என்ற பாட்டையும் பாடினார். சொல்வதை சுலபமாகப் புரிந்துகொள்கிறார். வார்த்தைகள் உச்சரிப்பும் தெளிவாக இருக்கிறது. இவரது பல பாட்டுக்கள் நிச்சயம் ஹிட் ஆகும்.

இளையராஜா: நான் அறிமுகப் படுத்திய குரல்களிலேயே மிகவும் மட்டமான குரல். '16 வயதினிலே' ரீ ரிக்கார்டிங்கின்போது ''ஒரு காட்டான் குரல் வேண்டும்'' என்றார் பாரதி ராஜா. அதில் 'சோளம் விதைக்கையிலே' பாட்டைப் பாடியவர்தான் இந்த இளையராஜா. இந்தக் குரல் கொஞ்சம் பாப்புலர் ஆயிட்டுது.. ஆகையாலே அவாய்ட் பண்ண முடியலை.இந்த ஆளை 'ஓரம் போ... ஓரம் போ'ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாரு. இந்த ஆள் சங்கீத ஞானம் தெரிந்து வந்து பாடினால் நன்றாக இருக்கும். என்ன பண்றது? இந்த ஆள் வேண்டான்னாலும், சில தயாரிப்பாளர்கள் பிடிவாதம் பிடிக்கிறாங்களே! ஆனால், இந்த ஆள் நிறைய சங்கீதம் கத்துக்கணும்.அறிமுகங்கள் இருக்கட்டும். கடைசியாகச் சில வரிகள். நான் புதுப் புதுக் குரல்களை அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். நல்ல குரல் இருந்து, சங்கீத ஞானத்துடன் சொல்வதைப் புரிந்துகொண்டு பாடக்கூடியவர்கள் தேவை.என்னிடம் பாட சான்ஸ் கேட்டு வரும் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் குரலில் உங்களுக்கே நம்பிக்கை இருக்க வேண்டும். டி.எம்.எஸ். போல, சுசீலா போல, ஜேசுதாஸ் போலப் பாடாமல் உங்கள் பாணியில் சொந்தமாகப் பாடுபவர்களாக இருந்தால் வாருங்கள். உங்களைத்தான் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.ஒன்று மட்டும் நிச்சயம்... என் கடைசிப் படம் வரை நான் புதுப் புதுக் குரல்களாக அறிமுகப்படுத்திய கொண்டே இருப்பேன்.

- பாலா

(19.08.1979 தேதியிட்ட ஆனந்த விகடன்  இதழில் இருந்து...)


from தமிழ் சினிமா https://ift.tt/h7nuS1V
https://ift.tt/4VdTKNi

Comments